கணவனைக் கொன்று அடக்கம் செய்த மனைவி கைது
உடலை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் இழுத்துச் சென்று கனகாவே தள்ளியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அரூர் அருகே மதுபோதையில், மனைவி மீது சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்திய கணவனை கொலை செய்து, வெளியில் தெரியாமல் அடக்கம் செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டி, இந்திரா நகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜா (40) கனகா தம்பதியினருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 30ஆம் தேதி இரவு ராஜா வீட்டின் அருகில் உள்ள வரட்டாறு கால்வாய் பகுதியில் தண்ணீரில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அப்பொழுது ராஜா உடலை வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு தெரியாமல், அவரது மனைவியின் பேச்சை கேட்டு உறவினர்கள் கீரைப்பட்டியில் உடல் அடக்கம் செய்தனர்.
ஆனால் ராஜாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கீரைப்பட்டி விஏஓ சிவக்குமார் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து,அரூர் வட்டாட்சியர் கனிமொழி, காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட ராஜாவின் உடலை தோண்டி எடுத்த அரூர் அரசு மருத்துவர் வசந்த், மருந்தாளுநர் கோவிந்தராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.
இந்நிலையில் நேற்று ராஜாவின் மனைவி கனகா அரூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து கனகாவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ராஜா, கனகாவின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு குடித்துவிட்டு மதுபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், தன்மீது சந்தேகப்பட்டு கொண்டு தனது கணவர் ராஜா 6 மாதமாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் மது போதையில் அடித்து துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த கனகா அருகில் இருந்த செங்கல்லால் தாக்கி பிடித்து தள்ளியதில் சுவற்றில் அடிபட்டு ராஜா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.மேலும் ஆத்திரம் தீராமல் ராஜாவின் கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் இழுத்துச் சென்று கனகாவே தள்ளியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கனகா மீது கொலை வழக்கு மற்றும் தடயங்கள் மறைத்தது தொடர்பாக, அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்திய கணவனை, மனைவி அடுத்து கொலை செய்து, கால்வாயில் வீசிய சசம்பவம் அரூர் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-பொய்கை கோ.கிருஷ்ணா
What's Your Reaction?