Rajini: பரபரப்பான அரசியல் சூழல்... டெல்லியில் வலம் வரும் ரஜினி... நடப்பது என்ன..?
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லியில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி ஷூட்டிங் செல்ல ரெடியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாய், அபுதாபி நாடுகளுக்குச் சென்றிருந்தார் ரஜினி. அதனைத் தொடர்ந்து இமயமலைக்குச் சென்ற சூப்பர் ஸ்டார், அங்கே தனது நண்பர்களுடன் தியானத்தில் ஈடுபட்டார். ரஜினி இமயமலையில் தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வீடியோகளும் வைரலாகி வந்தன.
டெல்லியில் வலம் வரும் ரஜினி
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லியில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது. 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், நேற்று (ஜூன் 4) வெளியாகின. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் பிந்தையை கருத்துக் கணிப்புகளும் கூறின. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பாஜவுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. பாஜக கூட்டணி 292 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன. இதனால் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும், கடைசி நேரத்தில் திருப்பங்கள் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மோடியை சந்திக்கும் ரஜினி?
இன்னொரு பக்கம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது. இதனையடுத்து டெல்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் டெல்லி சென்றுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என சொல்லிக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். தனி கட்சி அல்லது பாஜகவுடன் கூட்டணி என ஏதாவது ஒரு ரூட்டில் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ரஜினி டெல்லி சென்றது ஏன்?
ஆனால், இனி அரசியலுக்கு வருவதாக திட்டமில்லை என கடைசி நேரத்தில் அதிரடியாக அறிவித்தார் ரஜினி. அதன்பின்னர் தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இப்படியான நேரத்தில் ரஜினி ஏன் டெல்லி சென்றுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவிருப்பதால், மோடி பிரதரமாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரஜினி டெல்லி சென்றிருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனாலும் மோடி வரும் 8ம் தேதி தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரஜினி இமயமலையில் இருந்து சென்னை திரும்பும் வழியில் டெல்லி சென்றிருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினி தரப்பில் இருந்து இதுவரை எவ்விதமான விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
What's Your Reaction?