தென்மாவட்டங்களில் கடும் பாதிப்பு: பிரதமரை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர்
அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக்கூறி ஆலோசிக்கவும் திட்டம்
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் தொடர் மழை மற்றும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிப்புக்கு நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக்கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023)புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
What's Your Reaction?