வீட்டின் மேல் உலா வரும் சிறுத்தை, கூடவே எம்மாம் பெரிய கரடி.. உயிர் பயத்தில் உதகை மக்கள்..
உதகை அருகே எல்லநள்ளி கெட்கட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தையும், கரடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
மலை மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப் பரப்பை கொண்டுள்ளது. இந்த வனத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் காணப்டுகின்றன.
அவ்வப்போது காட்டிலிருந்து உணவு தேடியும், தண்ணீருக்காகவும் வன விலங்குகள் குடியிருப்புகள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக யானைகள் குடியிருப்புகளுக்கு நுழையும் வீட்டையும், ரேசன் கடைகளையும் சூறையாடி வருகிறது.
தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வன பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் உணவு தேடியும் குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக உதகை அருகேயுள்ள எல்லநள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை மற்றும் கரடி தொடர்ந்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை வேட்டையாடி செல்வதாகவும் அப்பகுதியினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுத்தையும், அதனை தொடர்ந்து கரடியும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நோட்டமிட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.
காட்டிற்குள்ளிருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சிறுத்தை மற்றும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?