போட்டி போட்டு ரோகித்-ஜடேஜா சதம்..! ராஜ்கோட் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..! ஆதிக்கம் தொடருமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலை பெற்றது. இந்நிலையில் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மாவும், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 10 எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களத்திற்கு வந்த சுப்மன் கில், மார்க் வுட்டிடம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ரஜத் படிதார் 5 ரன் எடுத்த நிலையில், டாம் ஹார்ட்லே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
33 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடினார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் தனது 11வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அவர் 131 ரன் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜடேஜாவுடன் சர்ஃபராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.
தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 62 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, குல்தீப் யாதவ் களமிறங்கினார். ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது 3வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன் எடுத்திருந்தது.
ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
What's Your Reaction?