Magnus Carlsen: பாரிஸில் ராஜாவாக மகுடம் சூடிய கார்ல்சன்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
பாரிஸில் நடைப்பெற்று வந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹிகாரு நகமுராவை தோற்கடித்து பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.

செஸ் விளையாட்டில் உலகளவில் முன்னணி வகிக்கும் 12 வீரர்கள், பாரிஸ் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்றனர். ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் (இன்று) 14 ஆம் தேதியுடன் நிறைவுப்பெற்றது.
இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 4 வீரர்கள் இத்தொடரில் விளையாட களமிறங்கினர். காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றான ரேபிட் ரவுண்ட்-ராபின் லீக் போட்டியின் முடிவில் உலக சாம்பியனான குகேஷ், விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகிய 3 இந்தியர்கள் தொடரிலிருந்து வெளியேறினர். இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் எரிகைசி மட்டும் காலிறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
இறுதி ஆட்டமானது ஹிகாரு நகமுரா மற்றும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைப்பெற்றது. இதில் முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்ற மேக்னஸ் கார்ல்சன், இரண்டாவது போட்டியினை டிரா செய்தார். இதன் மூலம், 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் கார்ல்சன். போட்டித் தொடரில் வென்ற கார்ல்சனுக்கு 2,00,000 அமெரிக்க டாலர்கள் (US$ 200,000) பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வின்செண்ட் கெய்மர், இயன் நெப்போமின்சாட்டி, கருணா, வாச்சியர் , அப்டஸ்ட்ரோவ் என 12 வீரர்களுடன் தொடங்கிய இத்தொடரில் 4 இந்தியர்கள் பங்கேற்றும் இறுதிப் போட்டி வரை யாரும் முன்னேறாததால் இந்திய செஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
What's Your Reaction?






