எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் 69% இட ஒதுக்கீடு சட்டத்தை எதுவும் செய்ய முடியாது.. ஜெயக்குமார் ஆவேசம்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை  ஒன்றும் செய்ய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சரை போன்று காவல்துறையும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்து உள்ளார்.

May 4, 2024 - 16:17
எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் 69% இட ஒதுக்கீடு சட்டத்தை எதுவும் செய்ய முடியாது.. ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை செனாய் நகரில் கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒருபுறம் சட்டம், ஒழுங்கு பிரச்னை, மற்றொருபுறம் போதை பொருளால் இளைஞர்கள் பெரிய அளவில் அடிமையாகி வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்னையும் அதிகரித்துள்ளது. 23% தண்ணீர் மட்டுமே நீர் நிலைகளில் நீர் இருப்பு உள்ளது. விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

205 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் பெற்று இருக்க வேண்டும். அதில் 50% மட்டுமே பெற்றோம். அதற்கு காரணம் வக்கில்லாத அரசு என  ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பரிசலில் சென்ற ஆற்றில் தற்போது பேருந்துகள் செல்லக்கூடிய நிலையாக நீர் நிலைகள் உள்ளது. எந்த நீர் நிலையிலும் தூர்வாரப்படவில்லை.

நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவைகளை ஆய்வு செய்யாமல் கொடைக்கானலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார் முதலமைச்சர் என்றும் ஜெயக்குமார் சாடினார். திமுக அரசு விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் எந்த சட்ட விதிமுறையும் பின்பற்றாமல் யூ டியூப்பர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது. 

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட செயலாளர் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் கூறினார். முதலமைச்சரை போன்று காவல்துறையும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்து உள்ளார்.

பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்  சமீபத்தில் அவர் பேசி வருவது எல்லோருக்கும் ஏற்புடையதாக இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வருவது, மதத்தை பிளவு படுத்தி வாக்குகளை பெற நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஜெயக்குமார் கூறினார். 

மத்தியில் மோடி, காங்கிரஸ் என எந்த கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் பின்பற்றி வரும் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தினை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயக்குமார் ஆவேசமாக குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow