சபோரிஜியா அணுமின் நிலையம் மீது தாக்குதல்.. உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

தங்கள் கட்டுபாட்டில் உள்ள சபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 

Apr 8, 2024 - 07:57
சபோரிஜியா அணுமின் நிலையம் மீது தாக்குதல்.. உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டிய நிலையில், அதனால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து நேரும் என்று அஞ்சி அதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. அதற்கு உக்ரைன் இணங்க மறுத்ததன் விளைவாகவே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. 

உக்ரைன் சிறிய நாடு என்பதால் எளிதில் வீழ்த்தி விடாமல் என்று எண்ணி ரஷ்யா தாக்குதலை தொடர்ந்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் தங்களால் முடிந்த அளவுக்கு சண்டையிட்டு ரஷ்யாவை கதிகலங்க செய்தது. 

இந்த போரில் இருநாடுகளும் பல்வேறு விதமான வான்வழி தாக்குதல்களை நடத்தி தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. போர் காரணமாக இருநாடுகள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உக்ரைனில் ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தும், பொருட்சேதம் அடைந்தும் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். 

போரிலிருந்து பின்வாங்க மறுத்து உக்ரைனை காக்கும் பொருட்டு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பல்வேறு நாடுகளின் உதவிகளை நாடி அதன் மூலம் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புதினுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) ரஷ்யா ஏவுகணை  தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 6 ஏவுகணைகள் மற்றும் 32 ட்ரோன்களை கொண்டு நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தகவலகள் வெளியானது. 

இதற்கிடையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தின் மூடப்பட்ட உலைக்கு மேலே உள்ள குவிமாடத்தை குறிவைத்து உக்ரை தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு முகமை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸி, அணுசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு இருதரப்பினரையும் எச்சரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow