திடீர் தாக்குதலில் 5 கிராமங்களை கைப்பற்றியுள்ளது ரஷ்ய ராணுவம்.... உக்ரைன் குற்றச்சாட்டு!
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் நிலவழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கார்கீவ் அருகே ஐந்து கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் ஓராண்டைக் கடந்து போர் நடந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொடர் தாக்குதல்களால் நகரங்களும் நிலைகுலைந்துள்ளன. இந்நிலையில், ரஷ்ய ராணுவம் புதிதாக ஐந்து கிராமங்களைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் குற்றஞ் சாட்டியுள்ளது.
வடகிழக்கு உக்ரைனில் எதிர்பாராத தரைத் தாக்குதலை நடத்திய ரஷ்ய ராணுவம், கிராமங்களைக் கைப்பற்றி இருப்பதாக அல் ஜசீரா என்ற உக்ரேனிய பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. கார்கிவ்வின் எல்லைப் பகுதியில் உள்ள கிரே ஸோனில் இந்த கிராமங்கள் இருப்பதால், இன்னும் இவற்றிலிருந்து ஆக்கிரமிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், அல் ஜசீரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய பத்திரிகைகள் இந்த செய்திகளை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, போரிசிவ்கா, ஒஹிட்சீவ், பைல்னா, ஸ்ட்ரிலெசா, பிளெடெனிவ்கா ஆகிய கிராமங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரஷ்யாவின் இந்த திடீர் நிலவழி தாக்குதலுக்கு எதிர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறோம் என்று உக்ரேனிய ராணுவம் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 1,700-க்கும் மேற்பட்டோர் வடகிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் திடீர் தாக்குதலில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருக்கலாம் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?