இனி விமானத்திலேயே காத்திருக்கத் தேவையில்லை... BCAS-ன் புதிய நடைமுறை இதோ..
பல்வேறு காரணங்களால் விமானம் புறப்பட தாமதமாகும் பட்சத்தில், பயணிகள் இனி அதிலேயே காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
போர்டிங் பகுதியில் இருந்து தங்கள் பொருட்களுடன் விமானத்தில் ஒருமுறை பயணிகள் ஏறிவிட்டால், தாமதம் ஏற்பட்டாலும் விமானத்திலேயே பயணிகள் இருக்க வேண்டிவந்தது. இதனால் தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் பல மணி நேரம் விமானத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், டிபோர்டிங் பகுதிக்கு பொருட்களுடன் சென்று மீண்டும் போர்டிங் பகுதியில் நுழைந்து உரிய நடைமுறையுடன் விமானங்களுக்கு வர வேண்டும். இந்நடைமுறையில் புதிய வழிமுறையை சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி விமானம் புறப்பட காலதாமதம் ஆகும் பட்சத்தில், போர்டிங் பகுதியிலேயே பயணிகள் நேராக இறக்கிவிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கி விடவில்லையெனில், விமானநிலையத்தில் உள்ள பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் அதற்கு உதவ வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானம் ஏறுவதற்கு முன்னதாக பயணிகளை உரிய துறையில் சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நடைமுறை அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி - கோவா இண்டிகோ விமானத்தில், புறப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட காலதாமதத்தால் ஒரு பயணி விமானியை தாக்கியதும், அதே காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்திலேயே பயணிகள் உணவருந்தியதும் நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த 2 சம்பவங்களால் 2 நாட்களில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட வழிவகுத்தது.
What's Your Reaction?