உலகநாடுகள் எதிர்பார்த்த பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியது. இஓஎஸ்-என் 1 (அன்விஷா) செயற்கைக்கோளுடன் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கான சேவைகளை அது வழங்கும். மேலும், விவசாயம், நகா்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கும் இந்தச் செயற்கைக்கோள் உதவும்.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்டு எனும் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்தது. இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள இருந்தது.இதைத் தவிர, ஸ்பெயின் ஸ்டாா்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டுள்ளது. அதைப் பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ள இருந்தது.
இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை . பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது என்றும் தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆண்டு தொடக்கத்தில் ஏவப்பட்ட முதல் ராக்கெட் தோல்வியை தழுவியுள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

