குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக அமைச்சர்கள் பேசலாமா? -சென்னை ஐகோர்ட் கேள்வி
மக்களின் அமைச்சராக உள்ள ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பேசக் கூடாது என்பதால் வழக்கு விசாரணைக்கு உரியது
இந்திய அரசியலமைப்பு அனுமதிக்காத நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக அமைச்சர்கள் பேசலாமா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் உதயநிதி ஸடாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி., ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ-வாரண்டோ வழக்குகளில், ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் வாதங்கம் முடிவடைந்த நிலையில், இறுதி வாதத்திற்காக வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (நவ.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து முண்ணனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சனாதனம் குறித்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால்,அமைச்சர்களாக அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானவர்கள் என பதவிப்பிரமாணம் செய்து, பொதுவெளியில் தினமும் பேசி வருகின்றனர்.
பத்திரிகைகளை சந்திக்கும்போது, திமுக தோற்றுவிக்கப்பட்டதே, சனாதனத்துக்கு எதிராகத்தான் என கூறுகின்றனர்.இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், தமிழகத்தில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
வர்ணாசிரமம் வகுத்துள்ள சமுதாய கொள்கைகளின்படி 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் ஏன் திமுக அரசாங்கம் வர்ணாசிரம கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. பதவிப்பிரமாணத்தின்படி ஆளுநரால் நியமிக்கப்படும் அமைச்சர்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக பேசினால் தகுதி இழப்பு செய்யலாம்.
பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும், வயதானவர்களாக இருந்தாலும் இந்த சமுதாயம் எப்படி உயர்ந்த மரியாதையை வழங்குமோ? அதுபோல அனைத்து சமுதாயத்தினருக்கும் மரியாதை வழங்க வேண்டியது அரசின் கடமை.அதை உறுதிபடுத்த வேண்டியது நீதிமன்றத்தின் தார்மீக கடமை.
தமிழகத்தில் 80 சதவிகித மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுகின்றனர்.அவர்களுக்கு அரசின் தலைவர் எந்த வாழ்த்தும் அரசு சொல்வது இல்லை.மற்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்.
சமத்துவம் பேசும் அரசு ஏன் பாரபட்சமாக செயல்பட வேண்டும்.அமைச்சர் சேகர் பாபு, தொழில் முறை அமைச்சராக மட்டுமே அறநிலத்துறையை நிர்வகித்து வருகிறார்.ஓர் இந்துவாக அவர் அத்துறையை கையாளவில்லை.அறநிலையத்துறை விதிகளின் படி இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் எவறும் அறநிலையத்துறை பதவியில் தொடர முடியாது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மதிக்கும் ஒரு சமுதாயமான சனாதனத்தை ஒரு நோய் என தெரிவிப்பதை ஏற்க முடியாது. இந்து முண்ணனி இந்துக்களுக்கான கட்சி கிடையாது. இந்து சமுதாய மக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் ஏற்படும் போது அதை தடுப்பதற்கான அமைப்பை மட்டுமே.
வெகுவாக மதிக்கப்படும் புராண இதிகாசமான மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன்னை பிராமணனாக கூறவில்லை. அரசரான விசுவாமித்திரர் கூட பிராமணர் கிடையாது. அதற்கான தகுதி இருந்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதை மட்டுமே சனாதனம் கூறுகிறது. யாருக்கும் குறிப்பிட்டவருக்கு மட்டுமே சமுதாயம் சொந்தம் என கூறவில்லை.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கோவிலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரையும் கடவுளாக வைத்து வழிபடுகின்றர்.இதில், எங்கே ஏற்றத்தாழ்வு இருக்கிறது என தெரியவில்லை. 5,000 ஆண்டுகளுக்கு முன் உயர்ந்தவர்? தாழ்ந்தவர்? என்ற பாகுபாடு இருந்திருக்கலாம்.அதற்காக இப்போது இருப்பவர்களை தவறான சிந்தனை கொண்டவர்கள் என கூறி தண்டனை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை.அரசியலமைப்பு அந்த அநிகாரத்தை நீதிமன்றத்திக்கு வழங்கவில்லை என தெரிவித்தார்.அப்போது நீதிபதி, நீதிமன்றத்திக்கு அதிகாரம் இல்லை என்றால், ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.தவறு நடந்தருந்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
தொடர்ந்து அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,அரசியலமைப்பின் படி சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரம் உள்ளது.அமைச்சர்களுக்கும் அந்த அதிகாரம் உள்ளது. திராவிட கொள்கை ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அதனால், இந்த கோ- வாரண்டோ வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை.
அரசாங்கத்தின் நிர்வாகம்,செயல்பாடு ஆகியவை நல்ல மனிதர்களால் நடைபெறுகிறதா? என்பதை நீதிமன்றங்கள் எப்படி தீர்மானிக்க முடியும். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்த வழக்கில், அமைச்சரவையில் தொடர்வதா? வேண்டாமா? என முதலமைச்சர் தான் முடிவு எடுக்க முடியும் என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.அதனால், கோ- வாரண்டோ வழக்கை நீதிமன்றம் விசாரிக்க முடியாது.
கடந்த 1902 மொழி பெயர்ப்பு செய்து எழுதப்பட்ட புத்தகத்தில் சனாதனம் மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்து உருவானது தான் என கூறப்பட்டுள்ளது. மனுஸ்மருதி ஏற்றத்தாழ்வுகளை கடைபிடித்தது என்பதை மனுதாரர்கள் ஏற்பதில் இருந்து, இன்றளவும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
கணவன் இறந்தால் அவரது மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு பிறகு பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதுபோல, இன்றும் சில சமுதாயத்தினருக்கு எதிராக ஏற்றத்தாழ்வு தொடர்வதால் தொடர்ந்து அவர்களின் உரிமைக்காக பேசப்படுகிறது.
எல்லாருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். அதை தெரிவிக்கவும், உரிமையை பெற்றுத்தரவும் அரசுக்கு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு குறிப்பிட்ட மதத்தின் உரிமைகள் மட்டுமல பேசவில்லை, அதனால் பாதிக்கப்படுபவர்களின் உரிமை பெறவும் கூறுகிறது.அதற்காக போராடவும் அனுமதி வழங்குகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தின் உரிமை பற்றி மட்டுமே பேச வேண்டும் என கூறவில்லை.
இதையடுத்து, நீதிமன்றத்திற்கு உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சாய்தீபக், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு இருந்தாலும், குறிப்பிட்ட மக்களால் நம்பப்படும் எந்த நம்பிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கக்கூடாது.
அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்த பின் அனைவருக்கும் பொதுவான அமைச்சர், குறிப்பிட்ட எந்த சமுதாயத்திற்கு எதிராகவும் பேச கூடாது. ஒரு கருத்து உண்மையாகவே இருந்தாலும், மக்களின் அமைச்சராக உள்ள ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பேசக் கூடாது என்பதால் வழக்கு விசாரணைக்கு உரியது என தெரிவித்தார்.
அனைத்து தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
What's Your Reaction?