திருப்பத்தூர் இளைஞரிடம் 6 லட்சத்தை அபேஸ் செய்த ஜார்கண்ட் குற்றவாளிகள்.. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

Apr 1, 2024 - 13:31
திருப்பத்தூர் இளைஞரிடம் 6 லட்சத்தை அபேஸ் செய்த ஜார்கண்ட் குற்றவாளிகள்.. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கை நிறைய சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி திருப்பத்தூர் இளைஞரிடம் ஆன்லைனில் ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த 3 குற்றவாளிகளை ஜார்க்கண்ட்  சிறையில் இருந்து மேல் விசாரணைக்காக  திருப்பத்தூர் சைபர் கிரைம் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

மோசடி நபர்கள் குறித்து எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருப்பத்துாரை சேர்ந்த  19 வயதுடைய மோனிஷ் என்பவருக்கு  பீகார் மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே அவர்களுடன் மோனிஷ் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பேசிய மர்ம நபர்கள் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், தங்களின் கல்விச்சான்றிதழை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பும்படி கேட்டுள்ளனர். வேலை கிடைக்கிறதே என்ற ஆசையில் மோனிஷ் தனது சான்றிதழை  வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினார். சிறிது நேரம் கழித்து மோனிசை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், தாங்கள் கேட்கும் பணத்தை நீங்கள் வங்கி கணக்கில் செலுத்தும் படி கூறியுள்ளார்.

அதன்படி மோனிஷ் அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு ஓரிரு நாட்களில் உங்கள் முகவரிக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிடும் என கூறிய நிலையில்  ஒரு மாதம் ஆகியும், எந்த அப்பாயின்மென்ட் ஆர்டரும் அவருக்கு வரவில்லை.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் திருப்பத்துார் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.. அதன் பேரில் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த முகேஷ்குமார், ஜித்தேந்ர குமார்,அமன்குமார் ஆகியோர் மோனிஷிடம்  பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. 

மூன்று பேரும் ஏற்கனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த குற்றத்திற்காக ஜார்க்கண்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பத்துார் சைபர் க்ரைம் காவல்துறையினர் குழுவினர் ஜார்கண்ட் மாநிலம் சென்று சிறையில் இருந்த மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு  அழைத்து வந்தனர். குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow