என் இமேஜை கெடுக்கிறார்கள்.. இந்து - முஸ்லீம் பிரிவினைவாதம் பேசவில்லை.. பிரதமர் மோடி உறுதி
இந்து - இஸ்லாமிய பிரிவினைவாதத்தை பேசினால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவன் என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் நினைப்பதாக கூறினார். அதிகக் குழந்தைகள் பெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக காங்கிரஸ் உழைப்பதாகவும், இந்துப் பெண்களின் தாலியை பறித்து அவர்களுக்கு வழங்க அக்கட்சி பாடுபடுவதாகவும் பிரதமர் கூறியதாக புகார் எழுந்தது.
இஸ்லாமியர்களை மறைமுகமாக ஊடுருவர்காரர்கள் என பிரதமர் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து அவரது பேச்சு பிரிவினையை உருவாக்குவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் இஸ்லாமியர்களைப் பற்றி பேசவில்லை - ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தைப் பற்றியும் பேசியதாகக் கூறினார். "அதிகக் குழந்தைகளைப் பற்றி பேசியது இஸ்லாமியர்கள் குறித்தது என யார் சொன்னது? ஏன் இஸ்லாமியர்களுக்கு இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்?.
ஏழைக் குடும்பங்களில் அதிகக் குழந்தைகள் கொண்டவர்கள் கூடுதலாக உள்ள நிலையில், அவர்தம் நலனைப் பற்றியே நான் பேசினேன். குஜராத் கலவரத்திற்குப்பின் என்னை எதிர்ப்பவர்கள் இஸ்லாமியர்களிடம் எனது இமேஜை கெடுத்து விட்டனர்." என தெரிவித்தார்.
அதோடு "இந்தப் பிரச்னை இந்து - இஸ்லாமியர்கள் குறித்தது அல்ல. இன்றும் என் வீட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது எங்கள் வீட்டில் உணவு சமைக்கப்படுவதில்லை." எனக் கூறினார்.
இந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் உங்களுக்கு வாக்கப்பளிப்பார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பர் என பிரதமர் பதிலளித்தார்.
"இந்து இஸ்லாமிய பிரிவினைவாதத்தை செய்யும் நாளில், நான் அரசியல் பொது வாழ்வில் இருந்து வெளியேற்றப்படுவேன். எனவே ஒரு நாளும் இஸ்லாமிய வெறுப்புக் கருத்துக்களை நான் பேசப் போவதில்லை. இது எனது உறுதிமொழி." இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?