சொந்த மண்ணில் சோகம் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி தெ.ஆப்பிரிக்கா அபாரம் - தொடரையும் கைப்பற்றியது - கேள்விகுறியாகும் கவுதம் கம்பீர் தலைமை
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி தெ.ஆப்பிரிக்கா வாரலாற்று சாதனை புரிந்துள்ளது. தொடர் தோல்வி காரணமாக பயிற்சியாளர் கம்பீர் மீதான தலைமை கடும் விமர்சனங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் இன்று முடிவடைந்தது. 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 140 ரன்களில் சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் பின்னணி மற்றும் இலக்கு நிர்ணயம்
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்களில் சுருண்டது. 288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்குப் பாலோ-ஆன் வழங்காமல், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுக்க, 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் சரிவு
549 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, நேற்றைய (4ஆம் நாள்) ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (5ஆம் நாள்) ஆட்டம் தொடர்ந்த நிலையில், குல்தீப் யாதவ் (5 ரன்), துருவ் ஜூரெல் (2 ரன்), ரிஷப் பண்ட் (13 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் (16 ரன்கள்) மற்றும் நிதிஷ் குமார் (0 ரன்) வெளியேறினர். ஒருபுறம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் கடந்து 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சிராஜ் அதே ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணி மொத்தமாக 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வரலாற்று வெற்றி மற்றும் சாதனை
இந்திய அணி 140 ரன்களில் சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டு நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேள்விகுறியாகும் கம்பீர் தலைமை
கம்பீர், தற்போது டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விகள், BCCI-யை டெஸ்ட் வடிவத்திற்கு புதிய பயிற்சியாளரை தேட வைக்கலாம் என்ற ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

