மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தை: பெற்றோர்கள் எடுத்த தைரியமான முடிவுக்கு பெருகும் வரவேற்பு
ஒடிசா மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்த மிக இளம் வயது நபராக 16 மாத குழந்தையான ஜான்மேஷ் கருதப்படுகிறார்.

மருத்துவ சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையான ஜன்மேஷ் லெங்காவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் எடுத்த துணிச்சலான முடிவு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. 16 மாத சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 2 நபர்கள் பலன் அடைந்துள்ளனர்.
மூச்சுத் திணறல் மற்றும் foreign body aspiration போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த 16 மாத சிறுவன் ஜான்மேஷ் பிப்ரவரி 12, 2025 அன்று புவனேஸ்வர் எய்ம்ஸ் குழந்தை மருத்துவப் பிரிவில் டாக்டர் கிருஷ்ண மோகன் குல்லாவின் பராமரிப்பில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அக்குழந்தைக்கு (CPR-cardiopulmonary resuscitation) சிகிச்சை வழங்கப்பட்டு கடந்த ஒரிரு வாரங்களாக தொடர் கண்காணிப்பிலும் வைத்திருந்தனர். இருப்பினும் கடந்த மார்ச் 1, 2025 அன்று குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம்:
இந்த நிலையில் தான், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் குழு குழந்தையின் இழப்பில் மூழ்கியிருந்த பெற்றோருக்கு உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது. கடும் மன வேதனையிலும், திடமான முடிவு ஒன்றினை எடுத்தார்கள். அதன்படி தங்கள் குழந்தையின் உறுப்புகளை உயிர்காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதித்தனர்.
பெற்றோர்களின் ஒப்புதலைத் தொடர்ந்து,அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட பல்துறை குழு, மாற்று அறுவை சிகிச்சை செயல்முறையை விரைவாக எளிதாக்கியது. டாக்டர் பிரம்மதத் பட்நாயக் தலைமையிலான இரைப்பை அறுவை சிகிச்சை குழுவால் கல்லீரல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, புது தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனத்திற்கு (ILBS) கொண்டு செல்லப்பட்டது, அங்கு இறுதி நிலை கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு அது பொருத்தப்பட்டது.
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரகங்கள் மீட்கப்பட்டு, ஒரு இளம் பருவ நோயாளிக்கு மாற்று சிகிச்சையில் வழங்கப்பட்டது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் நாயக்கின் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இளம் வயது உடல் உறுப்பு தான கொடையாளி:
இந்த உடல் உறுப்பு தானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்த மிக இளம் வயது நபராக 16 மாத குழந்தையான ஜான்மேஷ் கருதப்படுகிறார். புவனேஸ்வர் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பு குழு மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களை வெகுவாகப் பாராட்டியதோடு அவர்களின் அயராத முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும் ஆழ்ந்த துக்கத் தருணத்திலும் ஜான்மெஷ் பெற்றோர்கள் எடுத்த தன்னலமற்ற முடிவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் செயலை மருத்துவர்கள் ஊக்குவித்து வரும் நிலையில்,ஒடிசா சிறுவனின் பெற்றோர்கள் எடுத்த முடிவு இந்தியாவில் குழந்தை உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.
Read more:
கைவிரித்தது அமெரிக்கா- என்ன செய்யப் போகிறது உக்ரைன்?
உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
What's Your Reaction?






