புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த புகார்... ஆய்வு முடிவில் வந்த ட்விஸ்ட்?...

புதுக்கோட்டை மாவட்டம் குருவாண்டான் தெருவில் உள்ள மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியின் நீர், குடிப்பதற்கு உகந்ததாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Apr 30, 2024 - 11:03
புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த புகார்... ஆய்வு முடிவில் வந்த ட்விஸ்ட்?...

கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெருவில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கலாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து, நீர்த்தேக்க தொட்டியில், மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

 

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், "குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும் நோய்க்கிருமி தொற்றுகள் ஏதும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow