கோவையில் மத்திக்கும் – மாநிலத்துக்கும் உரசல்
எங்கேயாவது விதிகள் மீறப்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்பி தெளிவுபடுத்துவது வழக்கம்.
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தலைநகரில் மட்டுமல்ல மாநிலத்தின் பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இரண்டு அரசுகளின் தனித்தனி துறைகளுக்கு நடுவிலேயும் கூட ஆங்காங்கே உரசல்கள் உருவாகத்தான் செய்கின்றன. அதற்கு உதாரணம்தான் கோவை சிட்டியில் ரயில்வே துறைக்கும் – மாநகராட்சிக்கும் இடையில் உருவாகியுள்ள பஞ்சாயத்து.
கோவை மாநகராட்சியின் கீழ் வரும் நூறு வார்டுகளிலும் சாலை சந்திப்புகள், பள்ளி கல்லூரிகள், கோவில்களுக்கு அருகில் மேலும் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறாகவும் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்பது விதி.ஆனாலும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் நிறுவுவது தொடர்கிறது கோவை சிட்டியில்.
அதனால் விளம்பர நிறுவனங்களை அழைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை அறிவுறுத்தினர் மாநகராட்சி நிர்வாகத்தினர்.இந்நிலையில், கோவையில் மாநகராட்சி எல்லைக்குள் வரும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கை சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கோவை சிட்டியில் ரயில்வே நிலையத்துக்கு அருகில் பரூக் ஃபீல்ட்ஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அனுமதியில்லாமல் இரண்டு விளம்பர பலகைகள் புதியதாக வைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி மீண்டும் விளம்பர பலகைகள் வைத்திருப்பதால் ரயில்வே நிர்வாகத்துக்கும்,சம்பந்தப்பட்ட விளம்பர ஏனென்ஸிக்கும் நோட்டீஸ் அனுப்ப நகரமைப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார் மாநகராட்சி கமிஷனர்.
விதிமீறலை கண்டித்தும், அறிவுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்புவதால் ரயில்வே நிர்வாகம் கடுப்பாகி இதற்கு எதிர்வினையாற்றும் என்று பேசப்படுகிறது.மாநகராட்சியின் இந்த மூவ் குறித்து கோவை ரயில்வே சந்திப்பு நிர்வாகத்திடம் கேட்டபோது, “விதிமுறைகளை தெரிந்தே மீறும் எண்ணமில்லை. இதில் என்ன நடந்துள்ளது என்று விசாரிக்கப்படும்.மேலும், மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்த பிறகு ஆலோசிக்கப்படும்” என்றார்கள்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனோ, “விளம்பர பலகைகள் விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவானது மக்கள் நலன் சார்ந்தது.மாநகராட்சியின் நோக்கமும் அதுவே.எனவே எங்கேயாவது விதிகள் மீறப்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்பி தெளிவுபடுத்துவது வழக்கம்.அதைத்தான் செய்கிறது நிர்வாகம்” என்கிறார்.
-ஷக்தி
What's Your Reaction?