மிஸ்டு கால் கொடுத்து பாஜவில் இணைவது எப்படி என கேட்ட சிறப்பு எஸ்.ஐக்கள் மீது நடவடிக்கை
விசாரணை முடியும் முன்னரே பணியிடமாற்றம் செய்தது சரியல்ல
நாகை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடை பயண பிரச்சாரத்தின் போது “மிஸ்டு கால் கொடுத்து இணைவது எப்படி?” என சந்தேகம் கேட்ட இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைபிரிவுக்கு அதிரடி மாற்றம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற நடைபயண பிரச்சாரத்தை கடந்த 27ம் தேதி இரவு நாகை அருகே கீழ்வேளூர் கடைத்தெருவில் தொடங்கினார். இதன்பின்னர் அவர் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் வாகனத்தில் நின்றபடி பேசினார்.அப்போது அந்த பகுதியில் பாஜக சார்பில் சாமியான பந்தல் அமைத்து செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணாமலை வருகையை முன்னிட்டு நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் வெளிப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இருவரும் உறுப்பினர் சேர்க்கும் இடத்திற்கு சென்று பாஜகவில் சேர என்ன செய்ய வேண்டும்? மிஸ்டு கால் கொடுத்து இணைவது எப்படி? என்றபடி கேட்டு மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.
இதனை அங்கே இருந்த ஊடக நிருபர்கள் சிலர் படம் பிடித்ததோடு, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகவே இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி ஹர்ஷ்சிங் விசாரணை நடத்திய நிலையில் டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் எஸ்.பி ஹர்ஷ்சிங் ஆயுதப்படைப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ’சீருடையில் அவர்கள் நடந்துகொண்ட விதம் தவறுதான். அது குறித்து விரிவான விசாரணை முடியும் முன்னரே பணியிடமாற்றம் செய்தது சரியல்ல. உயர் அதிகாரிகள் தவறு செய்தால் முதலில் விசாரணை அப்புறம்தான் தண்டனை. ஆனால் மற்ற போலீசார் தவறு செய்தால் முதலில் தண்டனை. அப்புறம்தான் விசாரணை.” என்றபடி சக போலீசார் புலம்பினர்.
What's Your Reaction?