டி 20 உலகக் கோப்பை அரையிறுதி... பரிதாபமாக தோற்ற ஆப்கன்... சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி பரிதாபமாக தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

Jun 27, 2024 - 13:54
டி 20 உலகக் கோப்பை அரையிறுதி... பரிதாபமாக தோற்ற ஆப்கன்... சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

டிரினிடாட்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக வெற்றிப் பெற்றது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியே என ஜாம்பாவன்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பந்துவீச்சில் அசுர பலத்துடன் இருக்கும் ஆப்கன், பேட்டிங்கில் ஏமாற்றம் கொடுத்ததே இந்த தோல்விக்கு காரணமாகியுள்ளது. டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆப்கன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி அந்த அணியின் குர்பாஸ், இப்ராஹிம் ஸட்ரான் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. இந்த தொடர் முழுவதும் ஆப்கான் அணியின் பேட்டிங்கிற்கு நம்பிக்கை கொடுத்து வந்த குர்பாஸ், ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ஆப்கன் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அஸ்மத்துல்லா மட்டுமே 10 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்றவர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

இதனால், 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கன், மொத்தமே 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் மார்கோ ஜான்சன் 3 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி 1.5 ஓவர்களில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆப்கன் அணியின் மொத்த ஸ்கோரான 56-ல், எக்ஸ்ட்ரா வகையில் கிடைத்தது மட்டும் 13 ரன்கள். தனிப்பட்ட வீரர்களின் ஸ்கோரை விட இதுதான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் டி காக், ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரின் 5வது பந்தில் டி காக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு ஆப்கன் பவுலர்கள் டஃப் கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம் இருவரும் பதட்டமே இல்லாமல் விளையாடி தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பெறச் செய்தனர். 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது தென்னாப்பிரிக்கா. இதன்மூலம் முதன்முறையாக டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் அந்த அணி தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளது. அரையிறுதி வரை வந்து சாம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்ட ஆப்கன் வீரர்கள், கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.  

இன்று இரவு நடக்கும் இன்னொரு அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணியுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டாலும், ரன்ரேட் அடிப்படையில் இந்தியா தான் பைனல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow