நாம் தமிழர் கட்சிக்கு "ஒலிவாங்கி" சின்னம் ஒதுக்கீடு...எதுவாக இருந்தாலும் நாங்க ஜெயிப்போம்- சீமான் உறுதி..! 

2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதை அடுத்து சின்னம் எங்களுக்கு முக்கியம் அல்ல, எதுவாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Mar 22, 2024 - 16:19
நாம் தமிழர் கட்சிக்கு "ஒலிவாங்கி" சின்னம் ஒதுக்கீடு...எதுவாக இருந்தாலும் நாங்க ஜெயிப்போம்- சீமான் உறுதி..! 

2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. குறிப்பாக 2021ல் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக ஓட்டு சதவீதத்தில் 3-வது இடத்தையும் நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்நிலையில், சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க தாமதமானதால், அந்த கரும்பு விவசாயி சின்னம் கர்நாடாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர், தமிழக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதோடு, சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக மனு அளித்தனர். ஆனால், தீர்ப்பு நாம் தமிழர் கட்சிக்கு சாதகமாக வராத நிலையில், தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதேவேளையில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார், தம்பி சீமான் விருப்பப்பட்டால் எங்களுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் போட்டியிட்டால் சின்னத்தை பகிர்ந்துகொள்ள நாங்கள் சம்மதிக்கிறோம் என தெரிவித்தார். ஆனால், இதற்கு சீமான் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து, வேறு சின்னத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆட்டோ, சைக்கிள், செருப்பு, மைக் போன்ற சின்னங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மழை, வெயில் என பார்க்காமல் தனது உரத்த குரலில் மைக்கின் முன் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதேவேளையில், அவருக்கு ஏற்ற சின்னம் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கியது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "எங்களுக்கு சின்னம் முக்கியம் இல்லை, எதுவாகயிருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம்" என உறுதிபட கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow