"பிரதமர் வெறுப்புப் பேச்சு - EPS வெளியிட்டது கண்டன அறிக்கை தான்" ஜெயக்குமார் திட்டவட்டம்..

பிரதமரின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டது கண்டன அறிக்கைதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Apr 23, 2024 - 13:13
"பிரதமர் வெறுப்புப் பேச்சு - EPS வெளியிட்டது கண்டன அறிக்கை தான்" ஜெயக்குமார் திட்டவட்டம்..

கடந்த 21ம் தேதி ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சொத்துக்களை அடைய இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை என காங்கிரஸ் முன்னதாக பேசி வந்ததாகவும், இதனால் உங்களது சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கும் - அதிக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கும் செல்லும் எனவும் பிரதமர் கூறினார். மேலும் உங்களது வளங்கள் மற்றும் பெண்களின் மாங்கல்யத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரதமரின் இக்கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி தேர்தல் பிரசாரத்தின்போது, இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாகவும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் சர்ச்சைக் கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் அமைகிறது எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட கண்டனம் என்ற வார்த்தை இல்லாததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத துவேச அறிக்கை தவிர்க்கப்பட வேண்டுமேன இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறினார். அவர் வெளியிட்டது கண்டன அறிக்கைதான் எனவும், பிரதமரின் இந்தப் பேச்சை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜெயக்குமார் கூறினார். அதிமுக சார்பாக பிரதமருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow