Manushi: “இந்தியான்னு பேரு வர்ற முன்னாடியே இந்த மண்ணுல வாழ்ந்தவங்க..”: அனல் தெறிக்கும் மனுசி வசனம்

’அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Apr 20, 2024 - 16:09
Manushi: “இந்தியான்னு பேரு வர்ற முன்னாடியே இந்த மண்ணுல வாழ்ந்தவங்க..”: அனல் தெறிக்கும் மனுசி வசனம்

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். ஏற்கனவே பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள கோபி நயினார், அறம் படம் வெளியானதும் ரொம்பவே பிரபலமானார். போர்வெல் குழியில் சிக்கும் குழந்தையை காப்பாற்றுவதை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படம், மேக்கிங், வசனம் என எல்லாவிதங்களிலும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் கோபி நயினாரின் அடுத்தப் படம் என்ன, அது எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  

அதன்படி, அறம் வெற்றியைத் தொடந்து கோபி நயினார் இயக்கியுள்ள மனுசி திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆண்ட்ரியா, நாசர், பாலாஜி சக்திவேல் நடித்துள்ள இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியான மனுசி படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த ட்ரெய்லர் இதுவரை 12 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.    

இளையராஜாவின் பின்னணி இசையுடன் பரபரப்பும் விறுவிறுப்புமாக தொடங்கும் மனுசி ட்ரெய்லர் வசனங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது. ஆண்ட்ரியாவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார் அவரிடம் கேட்கும் கேள்விகளும்; அதற்கு ஆண்ட்ரியா கூறும் பதில்களும் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். முக்கியமாக ஆண்ட்ரியா தனது அப்பா பெயர் ராமசாமி எனக் கூறும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் வசனங்களும் கவனம் ஈர்த்துள்ளன.  

அதேபோல், ஆண்ட்ரியா அறிவியல் ரீதியாக அரசியலை விவரிக்கும் காட்சிகள், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எப்படிப் பார்க்க வேண்டும் எனக் கூறும் இடம் ஆகியவை மனுசி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முக்கியமாக “ஜாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவ உருவாக்குனாங்க… இந்தியாங்குற வார்த்தை வர்றதுக்கு முன்னாடியே இந்த மண்ணுல வாழ்ந்தவங்க நாங்க” என ட்ரெய்லர் முடியும் இடம் இன்னும் ஹைப் கொடுத்துள்ளது.  

மனுசி ட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு வசனங்களும் படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கடந்தாண்டு வெளியான வெற்றிமாறனின் விடுதலை படத்திலும் வசனங்களும் இளையராஜாவின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது அதற்கு நிகரான ஒரு படைப்பாக கோபி நயினாரின் மனுசி இருக்கும் என இப்படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow