ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவரச ஆலோசனை
ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
6-வது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
செவ்வாய்க்கிழமை பகலில் 3 இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றனா்.
பிற்பகலில் சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்திலும், சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை அருகே உள்ள கருணாநிதி சிலை எதிரிலும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நள்ளிரவில் ரிப்பன் மாளிகையில் முற்றுகையிட்ட தூய்மைபணியாளர்களை போலீசார் கைது செய்து கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை அழைப்பு: அமைச்சர்கள் அவசர ஆலோசனை
ஒருபுறம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றொரு புறம் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தலைநகர் சென்னை தவித்து வருகிறது. திடீர் திடீர் போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஆளாகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் அன்பில் பொய்யாமொழி ஆகியோர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?

