ED-யை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க..! செந்தில் பாலாஜியின் மனு இன்று விசாரணை.. சாதகமா? பாதகமா?
செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலும் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஜாமின் மனு மீது நாளைக்கு விசாரணைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2023 ஆண்டு ஜூன் 14-ம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். இதன் விசாரணை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அல்லி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, செந்தில்பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தமக்கு எதிரான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தன்னை விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டது. மேலும் கடந்த 16-ம் தேதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கமான பட்டியலில் மனு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையே, செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலும் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது ஜாமின் மனு மீதான விசாரணை நாளை (பிப்.21-ம் தேதி) விசாரணைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?