கைவிரித்தது அமெரிக்கா- என்ன செய்யப் போகிறது உக்ரைன்?
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பல உதவிகளை புரிந்தப்போதும், அதற்கான நன்றியுணர்வு உக்ரைனிடம் இல்லை என டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார்.

கடந்த பிப்.,28 ஆம் தேதி உலக அரசியலை திக்குமுக்காடச் செய்தது வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை. அனல் பறந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து விருந்தினை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார் ஜெலென்ஸ்கி. இந்நிலையில் புதிய உத்தரவு ஒன்றினை டிரம்ப் வெளியிட்டுள்ளது உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான சண்டை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்படும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி, கண்காணிக்க போவதாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
நிறைவேறாத கனிம ஒப்பந்தம்:
முன்னதாக வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற சந்திப்புக் கூட்டத்தின் போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பல உதவிகளை புரிந்தப்போதும், அதற்கான நன்றியுணர்வு உக்ரைனிடம் இல்லை என டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார். உண்மையில் இந்த சந்திப்புக் கூட்டம் இரு நாடுகளுக்கு இடையே கனிம ஒப்பந்தம் தொடர்பாக நடைப்பெற்றது. அப்போது போரில் முழுமையான ஆதரவினை அமெரிக்கா வழங்க வேண்டும் என ஜெலென்ஸ்கி வேண்டுக்கோள் விடுத்தார்.
அப்போது இடைமறித்த டிரம்ப், “நீங்கள் அமைதி குறித்து சிந்திப்பதே இல்லை. உங்களால் நிச்சயம் போரில் வெல்ல முடியாது. அமெரிக்கா தங்களுக்கு இராணுவ உதவியினை வழங்கியப் போதும் நீங்கள் அமெரிக்காவிற்கு நன்றிக்குரியவர்களாக ஒருப்போதும் இல்லை. அதுமட்டுமில்லாமல் உங்களின் செயல் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுகிறது” எனக்கூறியது பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியது. இறுதியில் கனிம ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
முற்றிய வார்த்தைப் போர்:
ஜெலென்ஸ்கி ஒரு சில தினங்களுக்கு முன்னர், ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு “அது மிக மிக தொலைவில் உள்ளது” என பதிலளித்து இருந்தார். இந்த கூற்றினை தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக தாக்கியும் பதிவிட்டு இருந்தார் டிரம்ப். தொடர் மோதல் போக்கிற்கு இடையே தற்போது உக்ரனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் உக்ரைனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி வெளியிட்டுள்ள கூற்றுப்படி, தற்போது உக்ரைனுக்கு செல்ல இருந்த அனைத்து அமெரிக்க இராணுவ உபகரணங்களும் இடைநிறுத்தப்படும். விமானங்கள் மற்றும் கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் உட்பட அனைத்தும் இந்த பட்டியலில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பினை பொறுத்தவரை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், கனிம ஒப்பந்தம் தொடர்பான திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை எனவும், உக்ரைன் தங்கள் கோரிக்கைகளுக்கு இசையும் பட்சத்தில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
Read more:
World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
Aus vs Ind: ஐசிசி தொடர்களில் யார் கை ஓங்கியுள்ளது? முடிவுக்கு வருகிறதா ரோகித் தலைமை?
What's Your Reaction?






