World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 20, 2013 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (UNGA) 68-வது அமர்வில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதியினை உலக வனவிலங்கு தினமாக (WWD) அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த தினத்திற்கான முக்கிய நோக்கம் என்பது, இந்த பூமியில் மனிதர்களை தாண்டி பல்வேறு வகையான வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. நகரமயமாக்கல் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி என்கிற பெயரிலும், பல நேரங்களில் மனிதர்களின் வேட்டையாடும் தன்மையினாலும் ஆண்டுக்கு ஆண்டு வனவிலங்குகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் தான் வனவிலங்கு மற்றும் தாவரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
குறைந்தப்பட்சம் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்:
தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, சில நாடுகளில் மீன்வளம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது. அதாவது, கடல் மீன் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகமாக மீன்பிடிக்கப்படுகிறது. இவை தொடரும் பட்சத்தில் மீன் வள இருப்பு குறைவதோடு, இதனைச் சார்ந்துள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள தேவைப்படும் நிதி தோராயமாக 824 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. . ஆனால்,பல்லுயிர் பாதுகாப்பில் ஆண்டுதோறும் 143 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 500 பில்லியன் அமெரிக்க டாலரினை வனவிலங்கு பாதுகாப்பிற்காக முதலீடு செய்ய அனைவருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளினை அடிப்படையாக கொண்டு உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “Wildlife Conservation Finance: Investing in People and Planet” (வனவிலங்கு பாதுகாப்பு நிதிக்கு முக்கியத்துவம் அளித்தல்) என்பதாகும்.
Read more: UN : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரியுங்கள்... ஐநாவில் இந்தியா குரல்...
வனவிலங்கு பாதுகாப்பு நிதியின் முக்கியத்துவம்:
விலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை எதிர்த்துப் போராட மற்றும் வனவிலங்குகளுடன் இணைந்து வாழும் உள்ளூர் சமூகங்களை ஆதரிக்க கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், தற்போதைய நிதி நிலைகள் மேற்குறிப்பிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ள பெரும்பாலும் போதுமானதாக இல்லை. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் நிதியில் கவனம் செலுத்துவதன் மூலம், பல்லுயிரியலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் வழங்குவதை உறுதி செய்யலாம்.
முதலீட்டினை அதிகரிக்க புதிய திட்டங்கள்:
இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு இணங்க, நிலையான நிதி மாதிரிகளை ஆராய்ந்து ஊக்குவிக்க பல்வேறு உலகளாவிய முயற்சிகள் தொடங்கப்படுகின்றன. இதில் பொது-தனியார் கூட்டாண்மைகள், பல்லுயிர் பாதுகாப்புடன் கூடிய சமூக அடிப்படையிலான திட்டங்கள் ஆகியவை அடங்கும். பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்ய உள்ளன.
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைப்புகளை ஆதரிப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் கொள்கைகளை (Policy) ஆதரிப்பதன் மூலமும், அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும் ஒவ்வொரு தனிநபரும் வனவிலங்கு பாதுகாப்பிற்கு பங்களிக்க முடியும்.
வனவிலங்கு பாதுகாப்பில் முதலீடு செய்வது என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல; மனிதகுலத்திற்கு நிலையான எதிர்காலத்தை வழங்குவதும் கூட என்பதை ஒவ்வொரு தனிநபரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
Read more: மெனோபாஸுக்கு பிறகான மன நலப் பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?
What's Your Reaction?






