மயிலாடுதுறையில் மாயமான சிறுத்தை.. அரியலூர் முந்திரி காட்டில் முகாம்.. அச்சத்தில் அரியலூர் மக்கள்..

மயிலாடுதுறையில் சுற்றி திரிந்த சிறுத்தை அரியலூர் மாவட்டத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. செந்துறை மருத்துவமனையில் சிறுத்தை சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் அதனை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Apr 12, 2024 - 10:47
மயிலாடுதுறையில் மாயமான சிறுத்தை.. அரியலூர் முந்திரி காட்டில் முகாம்.. அச்சத்தில் அரியலூர் மக்கள்..

மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை கண்டதாக பொதுமக்கள் கூறியதால் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் தேடும் பணியை தொடங்கினர். 

பின்னர் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதற்கிடையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையானது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில்  முகாமிட்டுள்ளது. 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  

அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்து உள்ளது. சிறுத்தையை மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்தவர்கள் பார்த்து பயந்து ஓடியுள்ளனர். 

சிறுத்தை அங்கிருந்த கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின்‌ மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொது மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

சிறுத்தை நடமாட்டம் குறித்த தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்து தேடினர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை மீண்டும் மருத்துவமனை அருகே இருந்த குடியிருப்பு, மருத்துவர் அறிவுச்செல்வன் ஆகியோர் வீட்டின் பின்புறமும் சென்றது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மருத்துவமனையில் உலா வந்தது சிறுத்தைதான் என்று வனத்துறையினர் உறுதி செய்தனர். 

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தெர்மல் ட்ரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்த நிலையில் சிறுத்தையை கண்டு பிடிக்க முடியவில்லை. மயிலாடுதுறையில் இருந்து சிறுத்தையானது இடம் மாறிக்கொண்டே இருப்பதால் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow