எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை நிர்ணயித்த காலத்திற்குள் முடிப்பீர்களா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

Mar 12, 2024 - 19:49
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை நிர்ணயித்த காலத்திற்குள் முடிப்பீர்களா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்கு முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் சுற்று சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 5-ம் தேதி  L&T நிறுவனம் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை பூஜையுடன் தொடங்கியது.  

இந்த நிலையில், நீதிமன்றம் வகுக்கும் காலத்திற்குள் மருத்துவமனையை கட்டி முடிக்க உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத் தாக்கல் செய்தார். மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய சிறப்பு தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று (மார்ச்-12) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2026-ல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் எனவும்,  முழு விவரங்களை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதார செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow