காஞ்சியில் கைதான பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பாளர்கள்
வாக்குறுதி தந்து விட்டு, இப்போது நிலம் எடுக்க நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை கண்டித்தும் அது குறித்து விளக்கம் பெற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு,
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷனை இன்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டனர்.
அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் எங்களை ஏமாற்றி விட்டதாக கூறி கோஷங்களை எழுப்பியவாறு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் ஜீசஸ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து பேசிய செயலாளர் சுப்பிரமணியன், “குறிப்பாக 486 நாட்களாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடிவரும் எங்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றி விட்டது. நீர்வள ஆதாரம் கெடும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பல ஆதாரங்கள் எடுத்து வைத்தும் எங்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குடியிருப்புகளை பாதுகாப்போம். உங்களை கைவிடாமல் காப்பாற்றுகிறோம். உங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் வாக்குறுதி தந்து விட்டு, இப்போது நிலம் எடுக்க நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது,நாங்கள் எங்கள் நிர்வாக குழுவிடம் தொடர்ந்து பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம்” என தெரிவித்தார்.
What's Your Reaction?