காவலரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கு.. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

எரிசாராயம் கடத்தல் கும்பலை தடுத்த தலைமைக் காவலரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆள்மாறாட்டம் செய்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Apr 26, 2024 - 07:53
Apr 26, 2024 - 08:41
காவலரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கு.. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 4 பேர் காரில் எரிசாராயம் கடத்திச் சென்றனர். அப்போது வாகனங்களில் வழிமறித்த போலீசார் மீது காரை விட்டு மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்று குற்றத்தை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மார்பு எலும்புகள் உடைந்து படுகாயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து காரை ஏற்றி காவலரைக் கொன்றதாக கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி, கருணாகரன் ஆகியோர் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்தனர்.

வழக்கில் கலைச்செல்வன், கருணாகரன் ஆகியோரை காப்பாற்ற நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆள்மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வகுமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் முன்நிறுத்திய 21 பேர் பிறழ்சாட்சிகள் இன்றி சாட்சியளித்தனர். தலைமைக் காவலரை கார் ஏற்றி கொலை செய்ததால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து காவலர் மீது கார் ஏற்றிய கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி, கருணாகரன் ஆகியோருக்கு  ஆயுள் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்த செல்வம், செல்வகுமார் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow