தொடங்கியது 2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு.. யார் யாருக்கு எங்கெங்கு வாய்ப்பு?

நாடு முழுவதும் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்காக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Apr 26, 2024 - 08:08
தொடங்கியது 2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு.. யார் யாருக்கு எங்கெங்கு வாய்ப்பு?

அதன்படி கேரளாவில் 20 இடங்கள், கர்நாடகாவில் 14 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், உத்தரப்பிரதேசம் - மகாராஷ்டிராவில் தலா 8 இடங்கள், மத்தியப்பிரதேசத்தில் 7 இடங்கள், அசாம் - பீகாரில் தலா 5 இடங்கள், மேற்குவங்கம் - சத்தீஸ்கரில் தலா 3 இடங்கள், ஐம்முகாஷ்மீர் - மணிப்பூர் - திரிபுராவில் தலா 1 இடம் என 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முன்னதாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தின் பேதுல் தொகுதியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததன் காரணமாக, அத்தொகுதியில் மே 7ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி, திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர், அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர், இதுதவிர நடிகர்கள் ஹேமமாலினி - அருண் கோவில், பாஜக மூத்த தலைவர் தேஜஸ்வி சூர்யா, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரசின் கே.சி.வேணுகோபால், பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இன்றைய வாக்குப்பதிவைப் பொறுத்தவரை கேரளாவும் ஒரு காலத்தில் பாஜகவின் கோட்டையாக இருந்த கர்நாடகாவும் பாஜக - காங்கிரஸ் போட்டியின் முக்கிய மாநிலங்களாக அறியப்படுகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை வயநாட்டில் ராகுல்காந்திக்கு எதிராக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன், இதுதவிர மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், வி.முரளீதரன் ஆகியோரின் மூலம் கேரளத்தில் வலுவான வெற்றியை நாட்ட பாஜக போராடி வருகிறது. அம்மாநிலத்தில் CPIM-காங்கிரஸ் எதிரெதிர் அணியில் நின்றாலும் யார்வெற்றி பெற்றபோதும் I.N.D.I கூட்டணிக்கே பலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பில் இதுவரை நாடாளுமன்றத்துக்கு எம்.பிஐ அனுப்பாத முக்கிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.

இதுதவிர வடக்கு, மேற்கு, வடகிழக்கு மாநிலங்களில் 370 இடங்களுக்கும் மேல் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. முதற்கட்ட தேர்தலுக்குப்பின் ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் குரல் ஓங்கியுள்ள நிலையில், பீகாரில் 5 தொகுதிகளிலும் I.N.D.I கூட்டணி வெற்றிபெறும் என ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

இன்றைய தேர்தலுக்குப்பின் மே 7ஆம் தேதி அடுத்த கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்டத் தேர்தலுக்குப்பின் 3 நாட்களுக்குப்பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow