தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: திமுக அரசு நாசமாக தான் போகும்- ஜெயக்குமார் சாபம்
சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 5 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல், பழைய பணி நிலைமையே தொடர வேண்டுமென சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 5 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
வட சென்னையின் zone 5,6,7-ல் உள்ள துறைமுகம், இராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் , திரு.வி.க நகர் போன்ற பகுதிகளில் 5 நாட்களாக குப்பை எடுக்கவில்லை. 5 நாட்களாக துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சியும் தூங்குகிறது, அரசும் தூங்குகிறது. நம்ம யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்கிற திமிர். ஸ்டாலின் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், ஒரு சர்வாதிகார போக்கோடு, ஜனநாயக விரோத போக்கோடு தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டால் உங்கள் அரசு நிச்சயமாக நாசமாகத் தான் போகும்.
தேர்தல் வரும் போது, பணம் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்கிற மமதை திமிரில் ஆணவப்போக்கில் திமுக இருக்கிறது. 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களே அழைத்துக் கூட பேச முன்வரவில்லை சென்னை மாநகராட்சி.
தனியாருக்கு குத்தகை விடுவதன் மூலம், அதுல கமிஷன் கிடைக்கும். தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் எக்கேடு கேட்டாலும் என்கிற பரவாயில்லை என்கிற எண்ணத்தில் தான் அரசு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தூய்மைப் பணியாளர்கள் உட்பட அரசுத்துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்தது திமுக. தூய்மைப் பணியாளர்களும் அந்த கோரிக்கையினை தான் நிறைவேற்ற சொல்றாங்க.
ஆனால் அதே நிறைவேற்றினார்களா? முதல்வராக இருக்கும் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம். பொய் சொல்றதுக்கு தேசிய விருது, ஆஸ்கர் விருது தர வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்கு தரலாம்” எனவும் முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயர்:
அண்மையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற அரசுத்திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், திட்டங்களுக்கு முதல்வர் பெயரை பயன்படுத்தக்கூடாது என அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றமும் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
இதுத்தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மக்கள் வரிப்பணத் திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயர் வைக்க என்ன உரிமை உள்ளது? ஸ்டாலின் பெயரை திட்டத்திற்கு வைக்க அவரது பணத்திலிருந்து எடுத்துச் செய்யலாம். அம்மா என்பது யுனிவர்சல் பெயர். அதை திட்டங்களுக்கு வைப்பதில் தவறு இல்லை” எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






