வளைகாப்பு விழாவிற்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி..  தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.. விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே

சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் படிக்கட்டு அருகே நின்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

May 3, 2024 - 11:11
வளைகாப்பு விழாவிற்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி..  தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.. விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே

உயிரிழந்த பெண்ணின் பெயர் கஸ்தூரி. தென்காசி அருகே உள்ள மேல் நிலைய நல்லூர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவரின் மனைவியாவார். கடந்த எட்டு மாதங்களுக்கு கஸ்தூரியுடன் சுரேஷ் குமாருக்கு திருமணம் நடந்தது.  கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இவர் தனது குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் வரை கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்தார். கொல்லம் ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கர்ப்பிணியான கஸ்தூரிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாயச் சங்கிலியை இழுக்க முயன்றபோது அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின் டிக்கெட் பரிசோதகர் உதவியுடம் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதாகவும் அதற்குள் ரயில் பல கிலோமீட்டர் தூரம் கடந்துவிட்டது என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு அழுதனர். ரயில் தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது. பயணித்தவர்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து கஸ்தூரியின் உடலை மீட்ட விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமளகு அனுப்பி வைத்தனர். 

கோவில் திருவிழாவை முடித்துவிட்டு வளைகாப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதையும் முடிப்பதற்காக தனது குடும்பத்திருடன் ரயில் சென்ற கர்ப்பிணி எதிர்பாராத விதமாக ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், S8. S9 ஆகிய இரண்டு பெட்டிகளில் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்று உறவினர்கள் கூறியுள்ள நிலையில் ரயில் கொல்லம் சென்றடைந்ததும் ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலி வேலை செய்கிறதா என்பது பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரைத்து விருத்தாச்சலம் கோட்டாட்சியருக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow