பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

Nov 29, 2023 - 07:16
பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் எம்.பி.,கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி  கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக்கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது,கே.சி.பழனிச்சாமி தரப்பில், அவதூறு கருத்திற்கான அனைத்து ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், பொது செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியதாகவும், அதன்பின்னர் கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளை தடுக்கவே வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் தெரிவித்த கருத்துகள் அவதூறானவை இல்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து, கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.ஆனால் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமென ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow