சூடுபிடிக்கும் ரூ.4 கோடி விவகாரம்... வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம்... நயினாருக்கு நெருக்கடி..?
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு CBCID-க்கு மாற்ற டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்னதாக 7 ஆம் தேதி தாம்பரம் ரயில்நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பணத்துடன் 3 பேர் கையும் களவுமாக சிக்கினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை செய்த சதீஷ், நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.4 கோடி வேட்பாளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் தாம்பரம் ஆய்வாளர் பால முரளி முன் ஆஜராகி 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும், பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் கூறி மனு அளித்தார்.
இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு CBCID-க்கு மாற்ற டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் CBCID-யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு சூடுபிடித்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கும் நெருக்கடி ஏற்படாலம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?