அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி பெண்ணுக்கு மிரட்டல்... நகை பறிக்க முயன்ற மூவர் கைது!
சென்னையில் வீடுபுகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்ற மர்மகும்பலைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கூலிங்கிளாஸை மட்டும் திருடிவிட்டு தப்பியவர்கள் சிக்கியது குறித்து செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...
சென்னையில் வீடுபுகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்ற மர்மகும்பலைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கூலிங்கிளாஸை மட்டும் திருடிவிட்டு தப்பியவர்கள் சிக்கியது குறித்து செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...
சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விமலா. தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வருகிறார். 26ஆம் தேதி இரவு, தனது வீட்டில் கணவரோடு இருந்தபோது, முகக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். தங்கநகைகளை கழற்றும்படி மிரடியதால் பயந்துபோன விமலா, அலறி உள்ளார்.
அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில், அங்கிருந்த விமலாவின் மகனின் கூலிங்கிளாஸ், பேக் என கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர். அப்போது பொதுமக்கள் மூவரையும் பிடித்து தர்ம அடி கொடுக்க இருவர் மட்டும் தப்பி ஓடியுள்ளனர். சிக்கிக் கொண்ட ஒருவர் குறித்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த ஒருவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவள்ளுவர் மாவட்டம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த மதன் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவரோடு வந்தவர்கள் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பென்டா என்ற தமிழரசு என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது இவர்களுடன் மேலும் 2 பேர் வந்திருந்ததும் தெரிய வந்தது.
முன்னதாக, பொதுமக்கள் தாக்கியதில் விஜய் ஆனந்திற்கும், மதனுக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் கைதான மதன், விஜய் ஆனந்த், தமிழரசு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?