தவெக உட்கட்சி மோதல் உச்சகட்டம்: செங்கோட்டையனை முற்றுகையிட்ட அதிருப்தியாளர்கள் : திருப்பூர் திறப்பு விழாவில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நகர அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்த கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
பொறுப்புகள் வழங்காததால் வெடித்த கோபம்
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தவெகவில் உழைத்து வந்த உள்ளூர் தொண்டர்களுக்கு வெள்ளகோவில் பகுதியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். வெள்ளகோவில் பகுதிப் பொறுப்புகளை ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, குகன் மற்றும் மணி ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் செங்கோட்டையனைச் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமாதானம் செய்த செங்கோட்டையன்
இந்தச் சலசலப்பால் அலுவலகத் திறப்பு விழாவில் சிறிது பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அதிருப்தி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்திய செங்கோட்டையன், "நாளை அலுவலகத்திற்கு வாருங்கள், பேசிக் கொள்ளலாம்" என்று கூறி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு, திட்டமிட்டபடி வெள்ளகோவில் நகர தவெக அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
தொடரும் உட்கட்சிப் பூசல்கள்
சமீபத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பு தனக்கு ஒதுக்கப்படவில்லை என அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் சென்று விஜய்யின் காரை முற்றுகையிட்டார். மேலும், தன்னை திமுகவின் கைக்கூலி என்று நிர்வாகிகள் விமர்சித்ததால் மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, வெள்ளகோவில் நிர்வாகிகளின் முற்றுகைப் போராட்டமும் தவெகவில் உட்கட்சிப் பூசல்கள் தொடர்வதைக் காட்டுகிறது.
இதே போன்று, திருவள்ளூர், மதுரை மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அம்மாவட்ட தவெக நிர்வாகிகளும் போர்க்கொடி உயர்த்தியதோடு, ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். உள்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் தவெகவில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
What's Your Reaction?

