சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்கள்! அதிரடியாக கைது செய்த போலீஸ்..
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 206 இடைநிலை ஆசிரியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதியில் திமுக, அரசுப் பொறுப்பேற்றதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், இதை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.29) முதல் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானம் பகுதியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று (மார்ச் 1) தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்ட 130 பெண்கள் உட்பட 206 ஆசிரியர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அப்போது பேசிய ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 ரூபாய் ஊதியமாகும், பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டதால் கடந்த 14 ஆண்டுகளாக பாதி அளவிற்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதி கூறியபடி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், இல்லை என்றால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.
What's Your Reaction?