சென்னை எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டலம் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையில் 40 நாட்களுக்கு முன்பாக அமோனியா கேஸ் கசிந்ததால் அதனைச் சுற்றியுள்ள சின்ன குப்பம், பெரிய குப்பம், மற்றும் எர்ணாகுப்பம் பகுதிகளில் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்த ஆலையை சில நாட்கள் தற்காலிகமாக மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, அமோனியா வாயு கசிவு நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அது குறித்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைப்படி அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஒரு பகுதி மக்கள் அந்த போராட்டத்தைக் கைவிட்டனர். எனினும், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட சில பகுதி மக்கள் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனத் தீவிரமாகப் போராடி வந்தனர்.
இதற்கிடையே, கோரமண்டல் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. மாசு கட்டுப்பட்டு வாரியம், ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அடங்கிய குழு அந்த ஆலையை ஆய்வு செய்து அதன்பின்னரே அந்த ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக ஆலை தரப்பில் கூறப்பட்டது.
எனினும், அந்த ஆலை இயங்கக் கூடாதது என்றும் தமிழக அரசும், மாசு கட்டுப்பட்டு வாரியமும் அந்த ஆலைக்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும், அந்த அலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறிருக்க, இன்று 41-ஆவது நாளாக சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், தாளம் குப்பம், நெட்டு குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், "நிரந்தரமாகத் தொழிற்சாலை மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்", என்று 33 மீனவ கிராம மக்கள் உறுதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்
நாளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாளை போராட்டம் மேலும், தீவிரப்படுத்தப்படும் எனப் போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | "தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை" - மதுரை உயர்நீதிமன்றம்