Udhayanidhi : சனாதனம் பற்றிய சர்ச்சை கருத்து... உதயநிதி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 15-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mar 6, 2024 - 08:15
Mar 6, 2024 - 08:16
Udhayanidhi : சனாதனம் பற்றிய சர்ச்சை கருத்து... உதயநிதி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சனாதன தர்மம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கில், விசாரணைக்கு தாம் தயார் என அவர் தெரிவித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. 

சென்னை காமராஜர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை எதிர்க்கக் கூடாது ஒழிக்க வேண்டும் எனவும், டெங்கு மலேரியா போல்தான் சனாதமும் எனவும் பேசினார். இந்தக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உதயநிதிக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்திலும், இச்சம்பவம் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் Quo warranto வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் விசாரித்த நிலையில் நவம்பர் 23-ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையில், தம் மீதுள்ள வழக்குகளுக்கு தாம் பதிலளிக்க தயார் என்றும், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் உதயநிதி மனுத்தாக்கல் செய்தார். அந்த விசாரணையின்போது உதயநிதி சாதாரண குடிமகன் அல்ல, அமைச்சராக இருப்பவர் தமது கருத்து எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், உதயநிதி தமது கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டு, தற்போது சட்டபிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கோருவதா என்றும் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow