Jagjit Singh Dallewal: 131 நாட்கள்.. தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டார் விவசாயி ஜக்ஜித் சிங்!

வேளாண் பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை (Minimum support price) வழங்குவது தொடர்பான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் பஞ்சாப் விவசாயி ஜக்ஜித் சிங் டல்லேவால். 

Apr 7, 2025 - 12:17
Jagjit Singh Dallewal: 131 நாட்கள்.. தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டார் விவசாயி ஜக்ஜித் சிங்!
Jagjit Singh Dallewal farmer

ஜக்ஜித் சிங், சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா கூட்டுக்குழுவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் ஆவார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை நீக்க நடைப்பெற்ற விவசாயிகளின் போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு அடிப்பணிந்து சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது மத்திய அரசு. அப்போது விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட சில அடிப்படை கோரிக்கைகளுக்கு அரசின் சார்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு உத்தரவாதம் அளித்த வேளாண் பயிர்களுக்கு குறைந்தப் பட்ச ஆதரவு விலை போன்ற கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்துமாறு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கினார் பஞ்சாப் விவசாயி ஜக்ஜித் சிங் டல்லேவால். ஜனவரி மாதம் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை தொடங்கினாலும், தற்போது வரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நாளுக்கு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தால் ஜக்ஜித் சிங் உடல்நிலை மோசமாகி வந்தது. இருப்பினும் மருத்துவ உதவிகளுடன் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

போராட்டத்தை கைவிட வலியுறுத்திய மத்திய அமைச்சர்கள்:

ஜக்ஜித் சிங் உண்ணாவிரதப் போராட்டம் சமீபத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஜக்ஜித் சிங்கிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் தான், பஞ்சாப்பின் ஃபதெகர் சாஹிப் மாவட்டத்தில் அமைந்துள்ள சிர்ஹிந்தில் நடைப்பெற்ற விவசாயிகள் மாநாட்டில்131 நாட்களாக தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார் ஜக்ஜித் சிங் டல்லேவால். இதுக்குறித்து அவர் பேசுகையில், “விவசாயத் தோழர்கள் பலரும் என் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தீர்கள். உங்கள் உணர்வுகளை நான் மதிப்பதோடு, உங்கள் அன்பிற்காக என் போராட்டத்தை கைவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன், விவசாய சங்கப்பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி வருகிற மே மாதம் 4 ஆம் தேதி நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:  யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயம்- அசத்தும் நத்தம் விவசாயி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow