ஆதவ் அர்ஜூனுக்கு திருமாவளவன் ஆதரவு ?- அதிர்ச்சியில் திமுக
ஆதவ் அர்ஜுனா கூட கூட்டணி தொடர்பான கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
விசிகவில் உள்ளவர்கள் கருத்து சொல்வதற்கு சுதந்திரமும், உரிமையும் உள்ளது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், வரும் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளில் இருந்து மகளிர் அணி தலைவர் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெறசெய்ய களப்பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தேசிய அளவில் மது விலக்கு மற்றும் போதைப்பொருள் கொள்கை வரையறுக்கப்பட்டு சட்டத்தை இயற்றி இந்திய அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முதன்மையான கோரிக்கையாகும்.
வருகிற 28ம் தேதி திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் விசிகவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அந்த மாநாட்டில் நாங்கள் பங்கேற்கிறோம். திமுக, விசிக இடையில், கூட்டணி தொடர்பாக எந்த சிக்கலும் எழவில்லை, எழாது. 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தேர்தலை மட்டும் கருத்தில் கொள்ளாமல் 2029ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு கட்சி நலன், கூட்டணி நலன், மக்கள் நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு விசிக முடிவெடுக்கும்.
ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு, சுதந்திரம் உண்டு எல்லா கட்சிகளிலும் தனிநபர் அவரவர் கருத்துக்களை சொன்னாலும் இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும். ஆதவ் அர்ஜுனா கூட கூட்டணி தொடர்பான கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
எனவே விசிக, திமுகவுடன் கொண்டுள்ள நல்லுறவு, கூட்டணி உறவு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த நெருடலும் இல்லை. கட்சி, கூட்டணி ஆகியவற்றிற்கு எந்த சேதமும் இல்லாமல் முடிவெடுக்க கூடிய பொறுப்பு தலைமை என்கிற முறையில் எனக்கு உள்ளது. எனவே கட்சியின் முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்றார்
What's Your Reaction?