ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்! கால்டுவெல் பேச்சு சர்ச்சைக்கு பாலபிரஜாபதி பதில்…
தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஆளுநர் ஆர். என் ரவி பேசியுள்ளதாகவும் சாடல்
மொழியியல் அறிஞர் கால்டுவெல், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர் என்று ஆளுநர் வரலாறு தெரியாமல் விமர்சித்துள்ளதாக நெல்லையில் பேசிய ஐயா வைகுண்டரின் தலைமைப்பதி குரு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் பேசியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த மார்ச் 6-ம் தேதி அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழா நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தைக் காக்க வந்தவர் அய்யா வைகுண்டர் என புகழாரம் சூட்டினார். அப்போது, கால்டுவெலும், ஜி.யு.போப்பும் மதமாற்றத்திற்காக நியமிக்கப்பட்டனர் என்று கூறிய அவர், கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை என்று விமர்சித்தார். இக்கருத்து, சர்ச்சையான நிலையில் ஆளுநருக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், பேராயர் கால்டுவெல் வரலாற்று ஆய்வுக்குழு சார்பில் தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பேராயர் பர்னபாஸ் மற்றும் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி குரு பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் மிகப்பெரிய கல்விமான் என்றும், இங்கிலாந்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்றும் அவருக்கு இங்கிலாந்து ராணியே பட்டத்தை வழங்கினார் என்றும் கூறினார். 1941-ம் ஆண்டு கால்டுவெல் இந்தியாவுக்கு வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் என்றும், ஆனாலும் தமிழ் மீதே அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது என்றும் நெல்லை மண்டல பேராயர் பர்னபாஸ் விளக்கினார்.
பின்னர் பேசிய பாலபிரஜாபதி அடிகளார், கால்டுவெல் பல மொழிகளைக் கற்று, அதன் பின்னர் தமிழ்மொழியே சிறந்தது என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழின் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இதுபோல் பேசுகிறார் என்று கடுமையாக சாடினார். சாதிக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென்ற அய்யா வைகுண்டசாமியை சனாதனத்தைக் காக்கப் பிறந்தவர் என்று வரலாறு தெரியாமல் ஆளுநர் பேசி வருவதாக தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பரபரப்பைக் கிளப்ப வேண்டும் என்பதற்காகவே பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?