மும்பை பாந்த்ராவில் உருவாக போகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்: ரூ 14 கோடி கட்ட தேவஸ்தான முடிவு
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மும்பையில் ஏழுமலையான கோயில் கட்டுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஸ்ரீபத்மாவதி சிறுவர் இதய சிகிச்சை மருத்துவமனையை நவீனப்படுத்த கூடுதலாக ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பக்தர்களின் வசதிக்காக 20 ஏக்கரில் திருப்பதியில் ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்படும்.தலக்கோனாவில் உள்ள சித்தேஸ்வரர் கோயில் மராமத்துக்காக 2-ம் கட்டமாக ரூ.14.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேவஸ்தான பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 60 பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.இதேபோன்று பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிக்கு கூடுதலா 18 கண்காணிப்பாளர்களை நியமனம் செய்ய ஆந்திர அரசிடம் ஒப்புதல் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருமலை மற்றும் மலைப்பாதையில் உள்ள புராதன கோயில்களை பராமரிக்க குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மும்பையில் உருவாக போகும் திருப்பதி ஏழுமலையான் கோயில் வடமாநில பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

