தஞ்சை: போதை பொருட்கள் விற்பனை - 3 கடைகளுக்கு சீல்
200-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சை அய்யன்கடை தெருவில் உள்ள ஒரு பட்டாணி கடை, வடக்கு வீதியில் உள்ள ஒரு மளிகை கடை, காமராஜர் மார்க்கெட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை என 3 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.தொடர்ந்து போலீசார் அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.இருப்பினும் தொடர்ந்து அந்த மூன்று கடைகளிலும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தஞ்சை நகர மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா உள்ளிட்டோர் அங்கு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்ததனர்.
மாவட்டத்தில் இதுவரை 7 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் வணிகம் செய்ய தகுதியற்றது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?