சவுக்கு சங்கரை விடாது விரட்டும் தமிழக போலீஸ்.. பாயும் வழக்குகள்… திருச்சி போலீஸ் போட்ட காப்பு
பெண் காவலர்களை அவதூறு பேசிய விவகாரத்தில் திருச்சியில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பாக பேசி பிரபலமானவர் சவுக்கு சங்கர். தமிழ்நாடு அரசு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் கடந்த 2022 செப்டம்பர் 15-ல் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து 6 மாத சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்த சவுக்கு சங்கர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். தொடர்ந்து தேனியில் இருந்து அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல, சேலம் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கீதா, அளித்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி அளித்துள்ள புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்ஃபிக்ஸ் யூடியூபர் மீது பெலிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சவுக்கு சங்கரின் உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களின் காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சவுக்கு சங்கர், ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகியோர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக திருச்சியில் பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை சென்ற போலீசார் மத்திய சிறையில் சவுக்கு சங்கரிடம் அவரை கைது செய்வதற்கான உத்தரவை வழங்கினர்.
இதேபோல் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், சென்னை மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவில் சவுக்கு சங்கர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். கோலமாவு சந்தியா என்ற பெயரில் அவதூறு கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை இணையத்தில் வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல், பெண்ணை தவறான நோக்கத்தில் அவமதித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்த சவுக்கு சங்கர் மீது சென்னை, சேலம், திருச்சி, கோவை, தேனியில் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கோவை மற்றும் தேனி வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற 4 வழக்குகளிலும் அவரை கைது செய்வதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?