சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.. ஏப்.16ல் திருச்சியில் உள்ளூர் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 13, 2024 - 11:40
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.. ஏப்.16ல் திருச்சியில் உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஸ்ரீரங்கநாதனின் சகோதரியாக போற்றப்படுகிறார் சமயபுரம் மாரியம்மன். ஆண்டுதோறும் தனது தங்கைக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார் ஸ்ரீரங்கநாதர்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இந்த விரதம் பூரணமடைந்த வுடன், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரைப் பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிவதாக ஐதீகம்.

அந்தவகையில், நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ அம்மன், கிராம்பு, ஏலக்காய் மாலையுடன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி, தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் சமயபுரம் மாரியம்மன் தேரில் எழுந்தருளுகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். வரும் 19ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு, தேர்தல் பணி செய்பவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow