தூத்துக்குடியில் ஓட ஓட விரட்டி ‘சம்பவம்’.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வழக்கறிஞர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கறிஞரை ரவுடி கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடியில் ஓட ஓட விரட்டி ‘சம்பவம்’.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வழக்கறிஞர்!

தூத்துக்குடி மாநகர் அண்ணா நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர், அதே பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். மேலும் தொழிலதிபராகவும் இவர் அறியப்படுகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது தங்கையின் கணவரான கோபிநாதன் என்பவருக்கும் சில நாட்களாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

சொத்து தகராறு என்று கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கோபிநாதன் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி, தனது உடற்பயிற்சிக் கூடத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற செந்தில் ஆறுமுகத்தை, சாலையில் இருந்த மர்ம கும்பல் ஒன்று மறித்து நின்றுள்ளது. அரிவாளும் கையுமாக நின்ற கும்பலிடமிருந்து செந்தில் ஆறுமுகம் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அவரைத் துரத்திய கும்பல், சரமாரியாக வெட்டியுள்ளது. 

அரிவாளால் வெட்டப்பட்டு, ஏராளமான ரத்தம் போன நிலையில், சம்பவ இடத்திலேயே செந்தில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்ததை கண்ட மக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தக் கொலைக்கும் கோபிநாதனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொழில் பிரச்னை காரணமாகவும் கொலை நடந்திருக்கலாம் என்று பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow