"என் கிட்ட காசு இல்ல.!!" "அதனாலதான் நிக்கல"
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவில் மத்திய அமைச்சர்களாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.முருகன், பியூஷ் கோயல், சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உட்பட பலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த முறை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது, தேர்தலில் போட்டியிடாதது குறித்து பார்வையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு, ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் அவகாசம் கேட்டதாகவும் கூறினார். பின்னர், தன்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு பணமில்லை என்றும், ஆந்திராவா, தமிழ்நாடா என்பதிலும் தனக்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நீங்கள் அந்த சாதியா, அந்த மதமா? இந்த ஊரா என பல கேள்விகள் வரும் என்ற காரணத்திலேயே, தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதியமைச்சரிடமே தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா என பார்வையாளர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் மொத்த பணமும் தனக்கு சொந்தமானது அல்ல, தனது சம்பளம்,வருமானம் மற்றும் சேமிப்பு மட்டுமே தனக்கு சொந்தமானது என்றும் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
What's Your Reaction?